சுதந்திரப் பெருமை

"தில்லை எவளியிலே கலந்துவிட் டாலவர் 
திரும்பியும் வருவாரோ?"என்னும் வர்ணமெட்டு
1.வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர் 
      வேறொன்று கொள்வாரோ?-என்றும் 
ஆரமு துண்ணுதற் காசை கொண்டார் கள்ளில் 
      அறிவைச் செலுத்துவாரோ?
(வீர)

2.

புகழுநல் லறமுமே யன்றியெல் லாம்எவறும் 
      கொய்யென்று கண்டா ரேல்-அவர் 
இகழுறும் ஈனத்தொண் டியற்றியும் வாழ்வதற்கு 
      இச்சையுற் றிருப்பாரோ?
(வீர)

3.

பிறந்தவர் யாவரும் இறப்ப துறுதியெனும் 
      பெற்றியை அறிந்தா ரேல்-மானம் 
துறந்தறம் மறந்தும்பின் உயிர்கொண்டு வாழ்வது 
      சுகமென்று மதிப்பாரோ?
(வீர)

4.

மானுட ஜன்மம் பெறுவதற் கரிதெனும் 
      வாய்மையை உயர்ந்தா ரேல்-அவர் 
ஊனுடல் தீயினும் உண்மை நிலைதவற 
      உடன்படு மாறுள தோ?
(வீர)

5.

விண்ணி லிரவிதனை விற்றுவிட் டெவரும்போய் 
      மின்மினி கொள்வா ரோ? 
கண்ணினும் இனிய சுதந்திரம் போனபின் 
      கைகட்டிப் பிழைப்பா ரோ?
(வீர)

6.

மண்ணிலின் பங்களை விரும்பிச் சுதந்திரத்தின் 
      மாண்பினை யிழப்பாரோ? 
கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால் 
      கைகொட்டிச் சிரியாரோ!
(வீர)

7.

வந்தே மாதரம் என்று வணங்கியபின் 
      மாயத்தை வணங்குவ ரோ? 
வந்தே மாதரம் ஒன்றே தாரகம் 
      என்பதை மறப்பாரோ?
(வீர)

No comments:

Post a Comment