சுதந்திரப் பயிர்

கண்ணிகள்

தண்ணீர்விட் டோவளர்த்தோம்? சர்வேசா!இப்யிரைக் 
கண்ணீராற் காத்தோம்;கருகத் திருவுளமோ?
1


எண்ணமெலாம் நெய்யாக எம்முயிரி னுள்வளர்ந்த 
வண்ண விளக்கிஃது மடியத் திருவுளமோ?
2


ஓராயிர வருடம் ஓய்ந்து கிடந்தபினர் 
வாராது போலவந்த மாமணியைத் தோற்போமோ?
3


தர்மமே வெல்லுமெனும் சான்றோர் சொல் பொய்யாமோ? 
கர்ம விளைவுகள்யாம் கண்டதெலாம் போதாதோ?
4


மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்நது கிடப்பதுவும் 
நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கிலையோ?
5


எண்ணற்ற நல்லோர் இதயம் புழுங்கியிரு 
கண்ணற்ற சேய்போற் கலங்குவதுங் காண்கிலையோ?
6


மாதரையும் மக்களையும் வன்கண்மை யாற்பிரிந்து 
காத லிளைஞர் கருத்தழிதல் காணாயோ?
7


எந்தாய்!நீ தந்த இயற்பொருளெ லாமிழந்து 
நொந்தார்க்கு நீயன்றி நோவழிப்பார் யாருளரோ?
8


இன்பச் சுதந்திரம் நின் இன்னருளாற் பெற்றதன்றோ? 
அன்பற்ற மாக்கள் அதைப்பறித்தாற் காவாயோ?
9


வானமழை யில்லையென்றால் வாழ்வுண்டோ? எந்தை சுயா 
தீனமெமக் கில்லை யென்றால் தீனரெது செய்வோமே?
10


நெஞ்சகத்தே பொய்யின்றி நேர்ந்ததெலாம் நீ தருவாய் 
வஞ்சகமோ எங்கள் மனத்தூய்மை காணாயோ?
11


பொய்க்கோ உடலும் பொருளுயிரும் வாட்டுகிறோம்? 
பொய்க்கோ தீராது புலம்பித் துடிப்பதுமே
12


நின்பொருட்டு நின்னருளால் நின்னுரிமை யாம்கேட்டால் 
என்பொருட்டு நீதான் இரங்கா திருப்பதுவே?
13


இன்று புதிதாய் இரக்கின்றோமோ? முன்னோர் 
அன்றுகொடு வாழ்ந்த அருமையெலாம் ஓராயோ?
14


நீயும் அறமும் நிலைத்திருத்தல் மெய்யானால், 
ஓயுமுனர் எங்களுக்கிவ் ஓர்வரம்நீ நல்குதியே
15

No comments:

Post a Comment