நடிப்புச் சுதேசிகள்

பழித்தறிவுறுத்தல்
கிளிக் கண்ணிகள்நெஞ்சில் உரமு மின்றி நேர்மைத் திறமு மின்றி, 
      வஞ்சனை சொல்வா ரடீ!-கிளியே! 
      வாய்ச் சொல்லில் வீர ரடீ1

கூட்டத்திற் கூடிநின்று கூவிப் பிதற்ற லன்றி, 
      நாட்டித்திற் கொள்ளா ரடீ!-கிளியே! 
      நாளில் மறப்பா ரடீ!2

சொந்த அரசும் புவிச் சுகங்களும் மாண்பு களும் 
      அந்தகர்க் குண்டாகுமோ!-கிளியே 
      அலிகளுக் கின்ப முண்டோ?3

கண்கள் இரண்டி ருந்தும் காணுந் திறமை யற்ற 
      பெண்களின் கூட்ட மடி!-கிளியே! 
      பேசிப் பயனென் னடீ!4

யந்திர சாலை யென்பர் எங்கள் துணிக ளென்பர் 
      மந்திரத் தாலே யெங்கும்-கிளியே! 
      மாங்கனி வீழ்வதுண் டோ?5

உப்பென்றும் சீனி என்றும் உள் நாட்டுச் சேலை என்றும் 
      செப்பித் திரிவா ரடீ!-கிளியே! 
      செய் தறியா ரடீ!6

தேவியர் மானம் என்றும் தெய்வத்தின் பக்தி என்றும் 
      நாவினாற் சொல்வ தல்லால்!-கிளியே 
      நம்புத லற்றா ரடீ!7

மாதரைக் கற்பழித்து வன்கண்மை பிறர் செய்யப் 
      பேதைகள் போலுயி ரைக்-கிளியே 
      பேணி யிரந்தா ரடீ!8

தேவி கோயிலிற் சென்று தீமை பிறர்கள் செய்ய 
      ஆவி பெரிதென் றெண்ணிக்!-கிளியே! 
      அஞ்சிக் கிடந்தா ரடீ!9

அச்சமும் பேடி மையும் அடிமைச் சிறும தியும் 
      உச்சத்திற் கொண்டா ரடீ!-கிளியே! 
      ஊமைச் சனங்க ளடீ!10

ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்று மில்லா 
      மாக்களுக் கோர் கணமும்-கிளியே! 
      வாழத் தகுதி யுண்டோ?11

மானம் கிறிதென் றெண்ணி வாழ்வு பெரிதென்றெண்ணும் 
      ஈனர்க் குலகந் தனில்-கிளியே! 
      இருக்க நிலைமை யுண்டோ?12

சிந்தையிற் கள் விரும்பிச் சிவசிவ என்பது போல், 
      வந்தே மாதர மென்பார்!-கிளியே! 
      மனதி லதனைக் கொள்ளார்13

பழமை பழமை யென்று பாவனை பேச லன்றிப் 
      பழமை இருந்த நிலை!-கிளியே! 
      பாமர ரேதறி வார்!14

நாட்டில் அவ மதிப்பும் நாணின்றி இழி செல்வத் 
      தேட்டில் விரப்புங் கொண்டே!-கிளியே! 
      சிறுமை யடைவா ரடீ!15

சொந்தச் சகோ தரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும், 
      சிந்தை இரங்கா ரடீ-கிளியே! 
      செம்மை மறந்தா ரடீ!16

பஞ்சத்தும் நோய்க ளிலும் பாரதர் புழுக்கள் போல் 
      துஞ்சத்தம் கண்ணாற் கண்டும்!-கிளியே! 
      சோம்பிக் கிடப்பா ரடீ!17

தாயைக் கொல்லும் பஞ்சத்தைக் தடுக்க முயற்சி யுறார் 
      வாயைத் திறந்து சும்மா!-கிளியே! 
      வந்தே மாதர மென்பார்!18

No comments:

Post a Comment