தாயின் மணிக்கொடி

   
பல்லவி

தாயின் மணிக்கொடி பாரீர்!- அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்!   

சரணங்கள்

1.   
ஓங்கி வளர்ந்ததோர் கம்பம்-அதன்
         உச்சியின் மேல்‘வந்தே மாதரம்’என்றே
பாங்கின் எழுதித் திகழும்-செய்ய
         பட்டொளி வீசிப் பறந்தது பாரீர்!    (தாயின்)



2.   
பட்டுத் துகிலென லாமோ?-அதில்
      பாய்ந்து சுழற்றும் பெரும்புயற் காற்று
மட்டு மிகந்தடித் தாலும்-அதை
      மதியாதவ் வுறுதிகொள் மாணிக்கப் படலம்    (தாயின்)

3.   
இந்திரன் வச்சிரம் ஓர்பால்-அதில்
      எங்கள் துருக்கர் இளம்பிறை ஓர்பால்,-(தாய்)
மந்திரம் நடுவுறத் தோன்றும்-அதன்
      மாண்பை வகுத்திட வல்லவன் யானோ?    (தாயின்)

4.   
கம்பத்தின் கீழ்நிற் றல்காணீர்-எங்கும்
      காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம்
நம்பற் குரியர்அவ் வீரர்;-தங்கள்
      நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பார்    (தாயின்)

5.   
அணியணி யாயவர் நிற்கும்-இந்த
         ஆரியக் காட்சியோர் ஆனந்தம் அன்றோ?
பணிகள் பொருந்திய மார்பும்-விறல்
      பைந்திரு வோங்கும் வடிவமும் காணீர்!    (தாயின்)

6.   
செந்தமிழ் நாட்டுப் பொருநர்,-கொடுந்
      தீக்கண் மறவர்கள், சேரன்தன் வீரர்,
சிந்தை துணிந்த தெலுங்கர்,-தாயின்
         சேவடிக் கேபணி செய்திடு துளுவர்.    (தாயின்)

7.   
கன்னடர் ஒட்டிய ரோடு-போரில்
      காலனும் அஞ்சக் கலக்கு மராட்டர்,
பொன்னகர்த் தேவர்க ளொப்ப-நிற்கும்
      பொற்புடை யார்இந்துஸ் தானத்து மல்லர்.    (தாயின்)

8.   
பூதலம் முற்றிடும் வரையும்-அறப்
      போர்விறல் யாவும் மறப்புறும் வரையும்,
      மாதர்கள் கற்புள்ள வரையும்-பாரில்
மறைவரும் கீர்த்திகொள் ரஜபுத்ர வீரர்    (தாயின்)

9.   
பஞ்ச நதத்துப் பிறந்தோர்-முன்னைப்
      பார்த்தன் முதற்பலர் வாழ்ந்தநன் னாட்டார்,
துஞ்சும் பொழுதினும் தாயின்-பதத்
         தொண்டு நினைத்திடும் வங்கத்தி னோரும்.    (தாயின்)

10.   
சேர்ந்ததைக் காப்பது காணீர்!-அவர்
      சிந்தையின் வீரம் நிரந்தரம் வாழ்க!
தேர்ந்தவர் போற்றும் பரத-நிலத்
      தேவி துவஜம் சிறப்புற வாழ்க!    (தாயின்)

No comments:

Post a Comment