உயிர் பெற்ற தமிழர் பாட்டு

பல்லவி

இனிஒரு தொல்லையும் இல்லை-பிரி
வில்லை,குறையும் கவலையும் இல்லை (இனி)

ஜாதி

மனிதரில் ஆயிரம் ஜாதி-என்ற
வஞ்சக வார்த்தையை ஒப்புவதில்லை;
கனிதரும் மாமரம் ஒன்று-அதில்
காய்களும் பிஞ்சுக் கனிகளும் உண்டு.

பூவில் உதிர்வதும் உண்டு-பிஞ்சைப்
பூச்சி அரித்துக் கெடுவதும் உண்டு
நாவிற் கினியதைத் தின்பார்-அதில்
நாற்பதி னாயிரம் சாதிகள் சொல்வார்.

ஒன்றுண்டு மானிட சாதி-பயின்று
உண்மைகள் கண்டவர் இன்பங்கள் சேர்வார்;
இன்று படுத்தது நாளை-உயர்ந்
தேற்றம் அடையும் உயர்ந்த திழியும்.

நந்தனைப் போல்ஒரு பார்ப்பான்-இந்த
நாட்டினில் இல்லை;குணம் நல்லதாயின்,
எந்தக் குலத்தின ரேனும்-உணர்
வின்பம் அடைதல் எளிதெனக் கண்டோம்.



இன்பத்திற்கு வழி

ஐந்து புலனை அடக்கி-அரசு
ஆண்டு மதியைப் பழகித் தெளிந்து,
நொந்து சலிக்கும் மனதை-மதி
நோக்கத்திற் செல்ல விடும்பகை கண்டோம்.

புராணங்கள்

உண்மையின் பேர்தெய்வம் என்போம்-அன்றி
ஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக் கண்டோம்
உண்மைகள் வேதங்கள் என்போம்-பிறிது
உள்ள மறைகள் கதையெனக் கண்டோம்.

கடலினைத் தாவும் குரவும்-வெங்
கனலிற் பிறந்ததோர் செவ்விதழ்ப் பெண்ணும்,
வடமலை தாழ்ந்தத னாலே-தெற்கில்
வந்து சமன்செயும் குட்டை முனியும்,

நதியி னுள்ளேமுழு கிப்போய்-அந்த
நாகர் உலகிலோர் பாம்பின் மகளை
விதியுற வேமணம் செய்த-திறல்
வீமனும் கற்பனை என்பது கண்டோம்.

ஒன்றுமற் றொன்றைப் பழிக்கும்-ஒன்றில்
உண்மையென் றோதிமற் றொன்றுபொய் யென்னும்
நன்று புராணங்கள் செய்தார்-அதில்
நல்ல கவிதை பலபல தந்தார்.

கவிதை மிகநல்ல தேனும்-அக்
கதைகள் பொய்யென்று தெளிவுறக் கண்டோம்;
புவிதனில் வாழ்நெறி காட்டி-நன்மை
போதிக்கும் கட்டுக் கதைகள் அவைதாம்.

ஸ்மிருதிகள்

பின்னும்(ஸ்)மிருதிகள் செய்தார்-அவை
பேணும் மனிதர் உலகினில் இல்லை;
மன்னும் இயல்பின வல்ல-இவை
மாறிப் பயிலும் இயல்பின ஆகும்.

காலத்திற் கேற்ற வகைகள்-அவ்வக்
காலத்திற் கேற்ற ஒழுக்கமும் நூலும்
ஞால முழுமைக்கும் ஒன்றாய்.எந்த
நாளும் நிலைத்திடும் நூலொன்றும் இல்லை

சூத்திர னுக்கொரு நீதி-தண்டச்
சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி;
சாத்திரம் சொல்லிடு மாயின்-அது
சாத்திரம் அன்று சதியென்று கண்டோம்.

மேற்குலத்தார் எவர்?
வையகம் காப்பவ ரேனும்-சிறு
வாழைப் பழக்கடை வைப்பவ ரேனும்,
பொய்யக லத்தொழில் செய்தே-பிறர்
போற்றிட வாழ்பவர் எங்கணும் மேலோர்.

தவமும் யோகமும்

உற்றவர் நாட்டவர் ஊரார் -இவர்க்கு
உண்மைகள் கூறி இனியன செய்தல்
நற்றவம் ஆவது கண்டோம்-இதில்
நல்ல பெருந்தவம் யாதொன்றும் இல்லை.
பக்கத் திருப்பவர் துன்பம்-தன்னைப்
பார்க்கப் பொறாதவன் புண்ணிய மூர்த்தி;
ஒக்கத் திருந்தி உலகோர்-நலம்
உற்றிடும் வண்ணம் உழைப்பவன் யோகி.

யோகம்,யாகம்,ஞானம்

ஊருக் குழைத்திடல் யோகம்;-நலம்
ஓங்கிடு மாறு வருந்துதல் யாகம்
போருக்கு நின்றிடும் போதும்-உளம்
பொங்கல் இல்லாத அமைதிமெய்ஞ் ஞானம்.

பரம்பொருள்

எல்லையில் லாத உலகில்-இருந்
தெல்லையில் காலம் இயங்கிடும் தோற்றம்
எல்லையில் லாதன வாகும்-இவை
யாவையு மாயிவற் றுள்ளுயி ராகி,

எல்லையில் லாப்பொருள் ஒன்று-தான்
இயல்பறி வாகி இருப்பதுண் டென்றே,
சொல்லுவர் உண்மை தெளிந்தார்-இதைத்
தூவெளி யென்று தொழுவர் பெரியோர்.

நீயும் அதனுடைத் தோற்றம்-இந்த
நீல நிறங்கொண்ட வானமும் ஆங்கே,
ஓயுதல் இன்றிச் சுழலும்-ஒளி
ஓங்குபல் கோடிக் கதிர்களும் அஃதே,

சக்திகள் யாவும் அதுவே-பல்
சலனம் இறத்தல் பிறத்தலும் அஃதே
நித்திய மாமிவ் வுலகில்-கடல்
நீரில் சிறுதுளி போலும்இப் பூமி,

இன்பமும் ஓர்கணத் தோற்றம்-இங்கு
இளமையும் செல்வமும் ஓர்கணத் தோற்றம்;
துன்பமும் ஓர்கணத் தோற்றம்-இங்கு
தோல்வி முதுமை ஒருகணத் தோற்றம்.

முக்தி

தோற்றி அழிவது வாழ்க்கை-இதில்
துன்பத்தோ டின்பம் வெறுமையென் றோதும்
மூன்றில் எதுவரு மேனும்-களி
மூழ்கி நடத்தல் பரசிவ முக்தி. (இனி)


*இளசை ஒருபா ஒரபஃது

காப்பு

நித்தரெனும் தென்னிளசை நின்மலனார் தாம்பயந்த
அத்திமுகத் தெங்கோ னடியிணையே-சித்திதரும்
என்தமிழி லேது மிழுக்கிலா மேயஃது

நன்றாகு வென்றருளும் நன்கு.

நூல்

தேனிருந்த சோலைசூழ் தென்னிளசை நன்னகரின்
மானிருந்த கையன் மலரடியே-வானிற்
சுரர்தம னியன்மால் தொழுங்காற் கிரீடத்
தரதனங்கள் சிந்து மகம்.

அகவிடத்திற் கோர்திலக மாமென் னிளசைப்
பகவனென் னெட்டீசன் பதமே-திகிரி
பொருந்துகரத் தானன்றோர் போத்திரியாய்த் தேடி
வருந்தியுமே காணாச்செல் வம்.

செல்வ மிரண்டுஞ் செழித்தோங்குந் தென்னிளசை
யில்வளரும் ஈசன் எழிற்பதமே-வெல்வயிரம்
ஏந்துகரத் தான்கரியன் எண்கணன்தம் உள்ளத்துப்
போந்துவளர் கின்ற பொருள்.

பொருளாள ரீய வேற்போ ரிளசை
மருளாள ரீச ரடியே-தெருள்சேர்
தமனா மறையவன்மேற் றன்பாச மிட்ட
சமனாவி வாங்கும்பா சம்

சங்கந் தவழ்கழனி தண்இளசை நன்னகரில்
எங்கள் சிவனார் எழிற்பதமே-துங்கமிகும்
வேத முடியின் மிசையே விளங்குறுநற்
சோதியென நெஞ்சே துணி

துணிநிலவார் செஞ்சடையன் தோள்இளசை ஊரன்
மணிகண்டன் பாத மலரே-பிணிநரகில்
வீழச்செய் யாது விரும்பியஈந் தேஅடியர்
வாழச்செய் கின்ற மருந்து.

மருளறக் கற்றோர்கண் மருவிளசை ஊரில்
வருமிறைவன் பாத மலரே-திருவன்
விரைமலரா விட்ட விழியாம் வியன்றா
மரைபூத்த செந்தா மரை.

தாமரையின் முத்தெங்குந் தான்சிதறுந் தென்னிளசைக்
கோமானெட் டீசன்மலர் கொள்பதமே-நாமவேல்
வல்லரக்கன் கைலை வரையெடுத்த காலவனை
அல்லற் படவடர்த்த தால்

ஆல விழியா ரவர்முலைநேர் தண்வரைசூழ்
கோல மணிஇளசைக் கோன்பதமே-சீல
முனிவர் விடுத்த முயலகன் மீதேறித்
தனிநடனஞ் செய்ததுவே தான்

தானே பரம்பொரளாந் தண்ணிளசை யெட்டீசன்
தேனேய் கமலமலர்ச் சீரடியே-யானேமுன்
செய்தவினை தீர்த்துச் சிவாநந்தம் பொங்கியருள்
எய்திடவுஞ் செய்யும் எனை.

தனி

கன்னனெனும் எங்கள் கருணைவெங்க டேசுரெட்ட
மன்னவன் போற்றுசிவ மாணடியே-அன்னவனும்
இந்நூலுந் தென்னா ரிளசையெனும் நன்னகரும்
எந்நாளும் வாழவைக்கு மே.

No comments:

Post a Comment