சொந்த நாட்டிற் பரர்க்கடிமை செய்தே
துஞ்சிடோம்:-இனி-அஞ்சிடோம்;
எந்த நாட்டினும் இந்த அநீதிகள்
ஏற்குமோ? தெய்வம்-பார்க்குமோ?1
வந்தே மாதரம் என்றுயிர் போம்வரை வாழ்த்து வோம்;-முடி-தாழ்த்துவோம்;
எந்தம் ஆருயி ரன்னையைப் போற்றுதல்
ஈனமோ?-அவ-மானமோ?2
பொழுதெல்லாம் எங்கள் செல்வங் கொள்ளை கொண்டு
போகவோ?-நாங்கள்-சாகவோ?
அழுது கொண்டிருப் போமோ? ஆண் பிள்ளைகள்
அல்லமோ?-உயிர்-வெல்லமோ?3