நான்காம்நாள்

நான்காம்நாள் எனனை நயவஞ் சனைபுரிந்து
வான்காதல் காட்டி மயக்கிச் சதிசெய்த
பொய்மைக் குயிலென்னைப் போந்திடவே கூறியநாள்
மெய்மை யறிவிழந்தேன்,வீட்டிலே மாடமிசை
சித்தந் திகைப்புற்றோர் செய்கை யறியாமல்.
எத்துக் குயிலென்னை எய்துவித்த தாழ்ச்சியெலாம்
மீட்டும் நினைத்தங்கு வீற்றிருக்கும் போழ்தினிலே,
காட்டுத் திசையினிலென் கண்ணிரண்டும் நாடியவால்
வானத்தே ஆங்கோர் கரும்பறவை வந்திடவும்
யானதனைக் கண்டே,‘இது நமது பொய்க்குயிலோ?’

என்று திகைத்தேன்: இருந்தொலைக்கே நின்றதனால்
நன்று வடிவம் துவங்கவில்லை; நாடுமனம்
ஆங்கதனை விட்டுப் பிரிவதற்கு மாகவில்லை.
ஓங்குந் திகைப்பில் உயர்மாடம் விட்டுநான்
வீதியிலே வந்துநின்றேன்.மேற்றிசையில் அவ்வுருவம்

சோதிக் கடலிலே தோன்றுவரும் புள்ளியெனக்
காணுதலும்,சற்றே கடுகி யருகேபோய்,
‘நாணமிலாப் பொய்க்குயிலோ’ என்பதனை நன்கறிவோம்
என்ற கருத்துடனே யான்விரைந்து சென்றிடுங்கால்.

யான்நின்றால் தான்நிற்கும் சென்றால் தான்செல்லும்;
மேனிநன்கு தோன்ற அருகினிலே மேவாது
வானி லதுதான் வழிகாட்டிச் சென்றிடவும்.
யான்நிலத்தே சென்றேன் இறுதியிலே முன்புநாம்
கூறியுள்ள மாஞ்சோலை தன்னைக் குறுகியந்த
ஊரிலாப் புள்ளுமத னுள்ளே மறைந்ததுவால்.
மாஞ்சோலைக் குள்ளே மதியிலிநான் சென்றாங்கே
ஆஞ்சோதி வெள்ளம் அலையுமொரு கொம்பரின்மேல்
சின்னக் கருங்குயிலி செவ்வனே வீற்றிருந்து,
பொன்னங் குழலின் புதிய ஒலிதனிலே

பண்டைப் பொய்க்காதற் பழம்பாட்டைத் தான்பாடிக்
கொண்டிருத்தல் கண்டேன்.குமைந்தேன்;எதிரேபோய்.
“நீசக் குயிலே,நிலையறியாப் பொய்மையே,
ஆசைக் குரங்கினையும் அன்பார் எருதினையும்
எண்ணிநீ பாடும் இழிந்த புலைப்பாட்டை
நண்ணியிங்கு கேட்க நடத்திவந்தாய் போலுமெனை”
என்று சினம்பெருகி ஏதேதோ சொல்லுரைத்தேன்,
கொன்றுவிட நெஞ்சிற் குறித்தேன்;மறுபடியும்
நெஞ்ச மிளகி நிறுத்திவிட்டேன் ஈங்கிதற்குள்,
வஞ்சக் குயிலி மனத்தை இரும்பாக்கிக்

கண்ணிலே பொய்ந்நீர் கடகடெனத் தானூற்றப்
பண்ணிசைபோ லின்குரலாற் பாவியது கூறிடுமால்;
ஐயனே,என்னுயிரின் ஆசையே ஏழையெனை
வையமிசை வைக்கத் திருவுளமோ? மற்றெனையே
கொன்று விடச் சித்தமோ?கூறீர் ஒருமொழியில்!

அன்றிற் சிறுபறவை ஆண்பிரிய வாழாது,
ஞாயிறுதான் வெம்மைசெயில்,நாண்மலர்க்கு வாழ்வுளதோ?
தாயிருந்து கொன்றால்,சரண்மதலைக் கொன்றுளதோ?
தேவர் சினந்துவிட்டால்,சிற்றுயிர்கள் என்னாகும்?
ஆவற் பொருளே! அரசே!என் ஆரியரே!

சிந்தையில் நீர் என்மேற்சினங்கொண்டால் மாய்ந்திடுவேன்
வெந்தழலில் வீழ்வேன்,விலங்குகளின் வாய்ப்படுவேன்.
குற்றம் நீர் என்மேற் கொணர்ந்ததனை யானறிவேன்.
குற்றநுமைக் கூறுகிலேன் குற்றமிலேன் யானம்ம!
புன்மைக் குரங்கைப் பொதிமாட்டை நான்கண்டு
மென்மையுறக் காதல் விளையாடினேன் என்றீர்;
என்சொல்கேன்!எங்ஙனுய்வேன்!ஏதுசெய்கேன்,ஐயனே!
நின்சொல் மறக்க நெறியில்லை;ஆயிடினும்
என்மேல் பிழையில்லை;யாரிதனை நம்பிடுவார்?
நின்மேல் சுமைமுழுதும் நேராகப் போட்டுவிட்டேன்,

வெவ்விதியே! நீ என்னை மேம்பாடுறச் செய்து
செவ்விதினிங் கென்னை என்றன் வேந்தனொடு சேர்த்திடினும்,
அல்லாதென் வார்த்தை அவர்சிறிதும் நம்பாமே
புல்லாக எண்ணிப் புறக்கணித்துப் போய்விட,நான்
அக்கணத்தே தீயில் அழிந்துவிழ நேரிடினும்,
எக்கதிக்கும் ஆளாவேன்;என்செய்கேன்?வெவ்விதியே!

No comments:

Post a Comment